திருகோணமலையில் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணலை - சாம்பல் தீவு பகுதியில் தனது மனைவியின் தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றவாளிக்கு 10 வருடம் கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்றையதினம் குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாம்பல் தீவு பகுதியில் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி தனது மனைவியின் தந்தையான நாகராசா பூலோகராசா என்பவரை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மூதூர், சேனையூர் ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த விஜேசேகரன் விஜேகரன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மனைவி கர்ப்பிணியாக இருக்கின்ற போது தனது மனைவியை தாக்கிய நேரத்தில் மனைவியின் தந்தையாரான நாகராசா பூலோகராசா என்பவரை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, உயிரிழந்தவரின் மனைவிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அப்பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாதகாலம் கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.