மைத்திரிபால சிறிசேனவை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு!

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணையம் முன் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று அறிவித்தல் அனுப்பப்பட்டது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளை 24ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு வருமாறு கோரப்பட்டுள்ளது.

முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க வருமாறு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் திகதி குறிக்கப்பட்டிருந்தது.

அண்மையில் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் சலுகைகளுடன் தூதுவர் பதவியை காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு வழங்குவதாக மைத்திரிபால சிறிசேன உறுதியளித்ததாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் சஹ்ரான் தொடர்பான விசாரணையை அவர் தமது நெருங்கிய அதிகாரியான அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தனவிடம் கையளித்திருந்தார் என்றும் அவர் சாட்சியமளித்திருந்தார்.

இதனையடுத்து மைத்திரிபால சிறிசேன அறிவித்தல் இல்லாமலேயே சாட்சியங்களை பார்வையிடுவதற்காக ஆணைக்குழுவுக்கு வந்திருந்தார்.

இந்நிலையிலேயே நாளைய தினம் அவரை சாட்சியமளிக்க அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்ட சாட்சியங்கள் தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டமைக்காக மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கத்தோலிக்க சபையின் மூன்று உதவி ஆயர்கள் ஆகியோரையும் நாளைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.