அரசாங்க வீட்டுத்திட்டத்தை பூரணப்படுத்த முடியாத மக்களுக்காக இராஜங்க அமைச்சரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Report Print Navoj in சமூகம்

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதிகளற்ற மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற வீடுகளை பூரணப்படுத்துவது தொடர்பில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சரிடம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பில் கிராமிய வீடமைப்பு் மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுரத்தவை சாணக்கியன் நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இராஜாங்க அமைச்சருடனான சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற கிராமத்துக்கொரு வீடு எனும் திட்டம் தொடர்பாகவும், ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதிகளற்ற மக்களுக்காக 6 லட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற போதிலும் மேற்படி வீட்டினை பூரணப்படுத்துவது தொடர்பில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சரிடம் தெளிவுப்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில் வீட்டுத்திட்டத்திற்கான உரிய கொடுப்பனவுகள் அனைத்தும் வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சரால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்படாமல் இருக்கின்ற வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் தான் உரிய நடவடிக்கைகளை அமைச்சுக்கள் ஊடாக கலந்தாலோசித்து மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.