உயிர்த்த ஞாயிறு தாக்குதலைவிட மோசமான நிலைமை சுமன ரத்ன தேரர் மூலமாக ஏற்படக்கூடும் என எச்சரிக்கை

Report Print Kumar in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விட மோசமான நிலைமை மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் மூலமாக ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் விஸ்ணுகாந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாகிஸ்தானிலிருந்து தௌஹீத் ஜமாத் அமைப்பினர் இலங்கைக்கு வருகின்றனர் என்றும், அவர்கள் கல்விக்காக வரவில்லை, ஆயுதப் பயிற்சிக்காகவே வருகின்றனர் என்றும் இலங்கைக்கு பாரிய ஆபத்து ஏற்படப்போகின்றது என்றும் நான் 2015ஆம் ஆண்டிலேயே கூறியிருந்தேன்.

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியின் பிரச்சினையானது இன்று நேற்றல்ல பல நாட்களாக நடந்து வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர் அடாவடித்தனமான வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்.

கடந்த அரசாங்கமோ அல்லது தற்போதுள்ள அரசாங்கமோ இவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

ஏறாவூர் நீதிமன்றத்தில் அவர் 30ஆம் திகதி ஆஜராக வேண்டுமென அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இவருடைய அடாவடித்தனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக இருக்கின்றது.

கிராமசேவகரை தாக்குவது, மின்சாரசபை ஊழியரை தாக்குவது என அரச உத்தியோகத்தர்களை தாக்குவது என்பது இவருக்கு அரச உத்தியோகத்தர்கள் மீது வெறுப்புணர்வு உள்ளதென்பதையே காட்டுகின்றது.

அரச உத்தியோகத்தர்களை இவர் தாக்குகின்றாரென்றால் இவருக்கு அரச உத்தியோகத்தர்கள் மீது ஏதோ வெறுப்பு விடயம் இருக்கின்றது.

தொடர்ந்து அரச உத்தியோகத்தர்களை தாக்குகின்றாரென்றால் இனிவரும் காலத்தில் சஹ்ரானைவிட பெரிய திட்டங்களை இவர் தீட்டியிருக்கலாம் என்பது எங்களுக்கு விளங்குகின்றது,

கடந்த அரசாங்கமானது அதனை கணக்கிலெடுக்காமல் கண்மூடித்தனமாக இருந்தது. இன்று தற்போதைய ஜனாதிபதியின் மூலமாக தினமும் நடைபெறுகின்ற விசாரணை சம்பந்தப்பட்ட விடயங்களை தொலைக்காட்சி மூலம் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூட அவருக்கு நன்றி தெரிவித்ததாக அறிகின்றோம். இது நல்ல விடயமாகும்.

ஆனால் அதைவிட மோசமான நிலைமை மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் மூலமாக ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றது.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததற்கு பின் இலங்கையில் தமிழர்களும், சிங்களவர்களும், முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து வாழக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

இருந்த போதும் கடந்த வருடம் நான்காம் மாதம் 21ஆம் திகதி நடந்த சம்பவம் மூலமாக முஸ்லிம்கள் தங்கள் இடத்திலும் பலம் இருப்பதை காட்டியிருந்தனர்.

அதேபோல சுமன ரத்ன தேரர் என்பவர் சண்டித்தனம் பண்ணுகின்ற ஒருவராக இருக்கின்றார். புத்த பெருமானை பின்பற்றுகின்றவர், புத்த துறவியாக இருக்கின்றவர் எல்லாவற்றையும் துறந்து துறவியின் கோலத்தில் இருக்கின்ற ஒருவர் ஒரு எறும்பைக்கூட கொல்லக்கூடாது.

அப்படியிருக்கின்றபோது சுமன ரத்ன தேரர் மங்களாராம விகாரையினுடைய மதகுருவாக இருப்பதற்கு தகுதியற்றவர்.

ஏனென்றால் மட்டக்களப்பு மாவட்டமானது தமிழர்களுடைய பாரம்பரியம் அதிகமாக இருக்கின்ற மாவட்டமாகும்.

இந்த மாவட்டத்தில் உள்ள விகாரையின் விகாராதிபதியாக இருக்கின்றவர் தமிழ் மக்களோடு சார்ந்த தமிழ் மக்களுக்கு சேவையாற்றக் கூடியவராகவும் புத்த பெருமானுடைய விடயங்களை தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றவராகவும் இருக்க வேண்டும்.

அப்படியான ஒருவர்தான் மட்டக்களப்பில் இருப்பது நல்லது. இவர் செய்கின்ற அடாவடித்தனம் எதிர்காலத்தில் மிகவும் மோசமானதொரு நிலைமைக்கு கொண்டு சென்று விடக்கூடியது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட சுயேட்சையாக களமிறங்கியிருந்தார். வெளிதேசத்திலிருந்தும் இவருக்கு பணம் கொடுக்கப்பட்டது.

இன்றும் அவர் வைத்திருக்கின்ற வாகனம், சுகபோகங்கள், அவர் வைத்திருக்கின்ற ஆட்களைப் பார்க்கின்றபோது இவர்களை நன்கு விசாரிக்க வேண்டும்.

ஏனென்றால் வெளி மாவட்டங்களில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட பெரும்பாலானோர் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் இதனை யாரும் அறியாத நிலையில் உள்ளனர்.

செங்கலடி போன்ற பகுதிகளில் அவர்கள் மறைந்துள்ளதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றது. சுமன ரத்ன தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு சமன் அனுப்பப்பட்டுள்ளது.

30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளது. குறித்த தேரரை கைது செய்வதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

ஆனால் அவரை கைது செய்யப் போனால் நாட்டில் உள்ள பௌத்த பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பக் கூடிய நிலைமை இருப்பதன் காரணமாக அது தவிர்க்கப்பட்டது.

இவர் செய்யும் அட்டகாசத்தினை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று தமிழ் மக்கள் தவறாக கருதிவிட வேண்டாம்.

இந்த நாட்டில் அட்டகாசங்கள் செய்த அத்தனைபேரும் இன்று கூண்டில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று சுமன ரத்ன தேரரும் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் வைத்து கைது செய்யப்படுவார்.

இந்த தேரர் ஊடாக இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் - சிங்கள மக்கள் உறவு பாரதூரமான நிலைக்கு செல்லும் என்பதை மறந்துவிடக்கூடாது.

தேரரின் செயற்பாடுகள் அனைத்தும் ஒரு வித்தியாசமான நிலையினை ஏற்படுத்துகின்றது. இவரின் செயற்பாடுகளை வைத்துக் கொண்டு நாங்கள் ஒட்டுமொத்த சாதுக்களையும் குறைகூறமுடியாது.

இவரின் செயற்பாடு தொடர்ந்து நீடிக்குமானால் அது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும். அதன் காரணமாக இவரை நீதிமன்றம் ஊடாக கைது செய்து இனியொருபோதும் கிழக்கு மாகாணத்தில் காலூன்றாத நிலையினை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.