இராணுவத்தினருடன் பொலிஸார் இணைந்து நடத்திய சோதனையில் இரவோடு இரவாக சிக்கிய இருவர்

Report Print Theesan in சமூகம்

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் நேற்று இரவு இராணுவத்தினருடன் பொலிஸார் இணைந்து நடத்திய வீதிச் சோதனையின் போது மன்னாரிலிருந்து கொழும்பிற்கு எடுத்து செல்ல முற்பட்ட 103.2 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா 10 மில்லியன் ரூபா பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகிறது.

மன்னார், வங்காலைப் பகுதியிலிருந்து கொழும்பிற்கு மீன்களை எடுத்துச் செல்லும் போலிக்காரணத்தினை பயன்படுத்தி மீன் கூலருக்குள் மீன் பெட்டிகளுக்கிடையே 49 பொதிகளில் எடுத்து செல்லப்பட்ட கஞ்சாவே கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது வாகனத்தில் பயணித்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் அம்பிலிப்பட்டிய பகுதியைச் சேர்ந்த 36, 38 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், அவர்களை இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.