19வது அரசியல் அமைப்பு திருத்தம் ஊடாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நடைமுறையில் இருந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸார் விடயத்தில் தலையீடுகளை மேற்கொண்டு வந்தார் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சாட்சியம் வழங்கியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அவர் இந்த சாட்சியத்தை நேற்று அளித்துள்ளார்.
பாதுகாப்பு சபை கூட்டங்களின் போது இந்த தலையீடுகள் இருந்தன.பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரி வஜிர விஜயகுணவர்தனவை குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் தன்னிச்சையாக கைது செய்ய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டு குற்றப்புலனாய்வு துறையின் அதிகாரி நிசாந்த சில்வா மீது சுமத்தப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி வஜிர விஜயகுணவர்தனவே பாதுகாப்பு சபை கூட்டத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால கோபமடைந்து நிசாந்த சில்வாவை நீர்கொழும்புக்கு மாற்றுமாறு உத்தரவிட்டதுடன், ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறும் தமக்கு உத்தரவிட்டதாக பூஜித ஜயசுந்தர சாட்சியம் அளித்துள்ளார்.
அதன்படி தாம் நிசாந்த சில்வாவை நீகொழும்புக்கு மாற்றியதாக சாட்சியம் வழங்கியுள்ளார்.எனினும் இரண்டு நாட்களின் பின்னர் தம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மைத்திரிபால, யார் நிசாந்த சில்வாவை நீர்கொழும்புக்கு மாற்றியதாக தம்மிடம் வினவியதாகவும் பூஜித தெரிவித்துள்ளார்.
அவரே அந்த உத்தரவை வழங்கினார் என்று கூறியபோது, அதனை மறுத்த மைத்திரிபால சிறிசேன, தாம் அவ்வாறான உத்தரவை வழங்கவில்லை என தம்மிடம் கூறியதாகவும் பூஜித தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரட்னவின் ஊடாக 2018 ஆம் ஆண்டுக்கு பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு வரவேண்டாம் என்ற செய்தியை அனுப்பியிருந்தார்.
இதன்போது தமக்கு பதில் மாற்றும் ஒருவரால் பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு அனுப்ப முடியுமா என அவரிடம் கேட்டபோதும் இறுதி வரை அதற்கான பதிலை வைத்தியரட்ன தமக்கு அறிவிக்கவில்லை என்றும் சாட்சியான பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.