முல்லைத்தீவு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

Report Print Theesan in சமூகம்
53Shares

முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பாலியாறு பகுதியில் கடந்த ஆறு வருடங்களாக இடம்பெற்று வரும் பாரிய மணல் கொள்ளையின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு அதனுடைய ஆற்றுப்படுக்கைகளும் பாரியளவில் தோண்டப்பட்ட நிலையில் பாலியாறு பல்வேறு சேதங்களை சந்தித்து வருகின்றது.

குறித்த ஆற்றில் மணல் ஆழமாக அகழ்வதனால் தமது கிராமத்தில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து வருவதோடு, விவசாயத்திற்கு போதிய நீர் வசதி இல்லாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலைமை தொடர்ச்சியாக இருக்கின்ற பட்சத்தில் தாம் இந்த கிராமத்தில் வாழ முடியாத நிலைமை ஏற்படும் எனவும், இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலைமை நீடித்ததன் பின்னணியில் கிராம மக்கள், இளைஞர்கள் இணைந்து விசேட அதிரடிப்படையினரை வரவழைத்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.