அதிகரித்துள்ள நரிகளின் நடமாட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஹொரன - மில்லனிய, மூவப்பட்டிய கிராமம் தொடர்பில் கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலையில், ஹொரன பகுதியில் நரிகளின் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு கிராமம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூவப்பட்டிய கிராமத்தில் இருந்து 17 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஓவிடியாகல கிராமமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கிராமத்தில் வசிப்பவர்களும் நரிகளின் பயத்தால் அவதிப்படத் தொடங்கியுள்ளனர். கிராமத்தில் உள்ள ஒருவரை நரி கடிக்க முயன்ற போது அவரின் தாக்குதலால் நரி உயிரிழந்துள்ளது.
பின்னர், வனவிலங்கு துறை அதிகாரிகள் உயிரிழந்த நரியை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர், இறந்த விலங்கு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்த விடயம் குறித்து தகவல் வெளியானதை தொடர்ந்து உரிய தரப்பினர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர். 1992 என்ற ஒரு சிறப்பு தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், குறித்த பகுதிகளில் நரிகளின் நடமாட்டம் இன்னும் இருப்பதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்திற்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.