பலாங்கொடையில் கொல்லப்பட்ட தமிழ் மாணவி! வெளியாகியுள்ள தகவல்

Report Print Murali Murali in சமூகம்

பலாங்கொட- பின்னவலவத்த பிரதேசத்தில் 16 வயதான பாடசாலை மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மாணவி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொட வைத்தியசாலையில் சுமார் ஐந்து மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கே.லோஷினி என்ற மாணவியே கடந்த 22ம் திகதி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

மாணவியின் தாயார் பிற்பகல் வீடு திரும்பிய போது மாணவி படுக்கையின் அருகே சடலமாக கிடப்பதை கண்டு அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, பலாங்கொட வைத்தியசாலைக்கு மாணவி கொண்டு செல்லப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்த மாணவி மட்டுமே வீட்டில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவியின் முகத்திலும், கழுத்திலும் காயம் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவி அந்த பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.