பெண்களின் முயற்சியும் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு மிக முக்கியம்! கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்

Report Print Yathu in சமூகம்

நுன்கடன் நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டெழுவதற்கு பயிற்சிகளுடன் கூடிய தொழில் சார் முயற்சிகள் பெரிதும் துணையாக இருக்கும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - பரந்தனில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று பெண்களுக்கான தொழில் சார் பயிற்சி நிறைவும்,சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பெண்களின் முயற்சியும் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு மிக முக்கியமானதாக உள்ளது. அபிவிருத்தி சார் செயற்பாடுகளில் ஆண், பெண் இருபாலாரும் இணைந்து செயற்படுவதனால் தான் அபிவிருத்தியை அடையமுடியும்.

அத்தோடு வருமானத்தை உயர்த்திக்கொள்வதற்கு அது வழிவகுக்கும். எமது மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சனத்தொகை வீதத்தில் அதிகளவானோர் பெண்களாகவே காணப்படுகின்றனர்.

நாட்டில் பெண்களும் அபிவிருத்தி சார் செயற்பாடுகளில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்ற அடிப்படையில் அது தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படுகின்றது.

அந்தவகையில் தவிர்க்க முடியாத இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு பல்வேறு விதத்திலும் இவ்வாறான பெண்கள் போராடி பிரச்சினைகளுக்குள் சென்றிருப்பதை நாங்கள் காணக்கூடியதாகவுள்ளது.

குறிப்பாக, நுன்கடன்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகமாக உள்ளனர். இவர்களை எல்லாம் மீளக்கொண்டு வருவதற்கு இவ்வாறான தொழில்சார் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இவ்வாறான பயிற்சிகள் முக்கியமானதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், வடமாகாண ஆளுநரின் செயலாளர், பிரதி பிரதம செயலாளர் மற்றும் மேற்படி நிறுவனங்களின் நிறைவேற்றுப்பணிப்பாளர், பிராந்தியப்பணிப்பாளர் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.