மைத்திரி உள்ளிட்டவர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு கடும் எச்சரிக்கை!

Report Print Murali Murali in சமூகம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து ஊடக அறிக்கைகளை வெளியிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது செயலாளருக்கும், கொழும்பு அதிமேற்றானியார் அலுவலக 3 துணை ஆயர்களுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

ஆணைக்குழுவின் சாட்சியங்கள் வினவுவது தொடர்பாக குறித்த தரப்பினர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஊடக அறிக்கை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தரவை வெளியிடும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அண்மையில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ பொய்யான கருத்துக்களை வெளியிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது செயலாளர் ஊடாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அவ்வறிக்கை நீதிமன்றத்திற்கு இணைவான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அவதூறு ஏற்படுத்துவதாகவும் இக்கூற்றுக்கள் ஊடாக தமது கட்சிக்காரரான ஹேமசிறி பெர்னாண்டோ அதிருப்தி அடைந்ததாகவும் சட்டத்தரணி டில்சான் ஜயசூரிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தார்.

இதுபற்றி கருத்து வினவுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சமில டி சில்வா ஆகியோருக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவின் சாட்சியங்கள் தொடர்பாக கொழும்பு அதிமேற்றானியார் அலுவலகம் கடந்த 20ம் திகதி வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவும் வினவுவதற்கு துணை ஆயர்களான மெக்ஸ்வல் சில்வா, ஜே.டி.என்டனி ஜயக்கொடி, அன்டன் ரஞ்சித் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அழைப்பாணைக்கு ஏற்ப நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சமீர டி சில்வா, துணை ஆயர் மெக்ஸ்வல் சில்வா ஆகியோர் மாத்திரமே ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தனர்.

அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துணை ஆயர்களான அன்டனி ஜயக்கொடி, அன்டன் ரஞ்சித் ஆகிய மூவரும் இன்று ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை.

இந்த சர்ச்சைக்குரிய ஊடக அறிக்கை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி ஆணைக்குழுவின் உத்தரவை இவ்வாறு வெளியிட்டார்.

காலத்திற்கு காலம் சீர்திருத்தப்படும் ஆணைக்குழு சட்டத்தின் 19வது சரத்தின் படி ஆணைக்குழுவிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிக்கையில் ஹேமசிறி பெர்னாண்டோவின் சாட்சியங்கள் பொய்யானவை என சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதியை சாட்சியளிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு அழைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன, சமீரடி சில்வா ஆகியோர் அவ்வாறானதொரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்க கூடாதென அவர் தெரிவித்தார்.

அத்துடன் மைத்திரிபால சிறிசேனவையும் அவரது பிரத்தியேக செயலாளரையும் எச்சரிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி இதன்பின்னர் இதுபோன்ற ஊடக அறிக்கைகளை வெளியிட வேண்டாமென தெரிவித்தார்.

அத்தோடு துணை ஆயர்கள் மூவரையும் எச்சரித்ததுடன் இதுபோன்ற ஊடக அறிக்கைகளை இதன் பின்னர் வெளியிட வேண்டாமெனவும் தெரிவித்தனர்.