சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

Report Print Varunan in சமூகம்

கல்முனையிலுள்ள கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை இரண்டாம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இன்று காலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

எனினும் உடனடியாக சடலத்தை அடையாளம் காண பொலிஸார் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை.

இதனால் பொதுமக்களின் உதவியை நாடி சடலம் தொடர்பாக அறிவித்து இனங்காண உதவுமாறு கேட்டிருந்தனர்.

அதன் பின்னர் அதிகளவான மக்கள் வந்து பார்வையிட்டு சென்றிருந்த நிலையில் இறந்த பெண்ணின் மகள் சடலத்தை அடையாளம் காட்டியிருந்தார்.

இதனடிப்படையில் கல்முனை - 02 அன்னை வேளாங்கண்ணி வீதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான 75 வயது மதிக்கத்தக்க சின்னத்தம்பி நேசம்மா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டதாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.