சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களை பாரிய கடன் சுமைகளுக்குள் தள்ளுகின்றன! மட்டக்களப்பு அரச அதிபர்

Report Print Kumar in சமூகம்

சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கின்றோம், மக்களுக்கு உதவுகின்றோம் என்ற போர்வையில் நுண்கடன்களை வழங்கி, மக்களை பாரிய சுமைகளுக்குள் தள்ளுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இனங்களிடையே நல்லுறவினை கட்டியெழுப்பும் நோக்குடன் பொருளாதார அபிவிருத்தியூடாக நிலையான சமாதானம் என்னும் தொனிப்பொருளிளான வணிக சந்தையும், கண்காட்சியும் இன்று பிற்பகல் மட்டக்களப்பில் ஆரம்பமானது.

எஸ்கோ அமைப்பின் ஏற்பாட்டில் ஆசிய மன்றத்தின் உதவியுடன் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும், இனங்களிடையே நல்லுறவினை கட்டியெழுப்பவும் இந்த கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் ஆசிய மன்றத்தின் உதவி வதிவிட பிரதிநிதி ஜொகான் ரெபேட், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இன்று ஆரம்பமான கண்காட்சி நாளை இரவு 10.00மணி வரையில் நடைபெறவுள்ளது.