சம்பளம் வழங்குவதில் பொலிஸார் அசமந்தம்: வவுனியா நகரசபை உறுப்பினர் குற்றச்சாட்டு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பணியில் ஈடுபட்டு வந்த காவலாளிக்கு பொலிஸாரால் வழங்கப்படும் கொடுப்பனவு ஏழு மாதங்களாக வழங்கப்படாத நிலையில் அவர் இன்றிலிருந்து பணியில் ஈடுபடுவதை நிறுத்தியுள்ளதாக வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் குறித்த கடவையூடாக பயணம் செய்யும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் காவல் கடமைகளில் ஈடுபட்டுவரும் காப்பாளர்களுக்கு பொலிஸாரால் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த கடவையில் கடமையில் உள்ள ஊழியர் ஒருவருக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் குறித்த ஊழியர் இன்றிலிருந்து தனது சேவையை இடைநிறுத்தியுள்ளார் என தெரியவருகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே நகரசபை உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

எனது வட்டாரத்திற்குட்பட்ட குறித்த கடவையூடாக தினமும் அதிகளவான பொது மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடவை ஊழியர் பணி செய்யாமையால் புகையிரதம் வருவது தெரியாமல் பொதுமக்கள் அச்சத்துடன் கடவையை கடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அவருக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவை வழங்காமல் பொலிஸார் அசமந்தமான முறையில் பொறுப்பற்ற வகையில், செயற்பட்டு வருகின்றனர்.

இதன்மூலம் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பினை பொலிஸாரே ஏற்படுத்தியுள்ளனர்.

எனவே அவருக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவை உடனடியாக வழங்கி பயணிகளின் பாதுகாப்பு விடயத்தினை உறுதி செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.