ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஆரம்பம்

Report Print Kumar in சமூகம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு நடைபெற்றுவருகின்றது.

புலமைப்பரிசில் தேர்வுக்கு இம்முறை 331,694 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு சிங்கள மொழியில் 248,072 மாணவர்கள், தமிழ் மொழியில் 83,622 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன.

சுகாதார பிரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்துசெல்வதுடன் மாணவர்கள் கைகளை தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களை அழைத்துவரும் பெற்றோரும் சுகாதார வழிமுறைகளைப்பின் பற்றியவாறு பாடசாலைகளுக்கு சமூகமளித்ததை காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

திருகோணமலை

திருகோணமலை மாவட்ட பாடசாலைகளில் கொரொனாவுக்கும் மத்தியில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் சுமூகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து தங்களது மாணவர்களை பெற்றோர்கள் பரீட்சைக்கு அனுப்பி வைத்ததையும் காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.

இதன் போது பாடசாலைகளின் வளாகத்தில் கை கழுவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு,சமூக இடைவெளி பேண்ப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை பாடசாலைகளுக்கு முன்பாக போக்குவரத்து பொலிஸார் தமது கடமையினை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செய்தி மற்றும் படங்கள் - அப்துல் சலாம் யாசீம், முபாரக்

வவுனியா

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 3578 மாணவர்கள் தோற்றியதுடன் அவர்களிற்காக 48 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் வவுனியா தெற்கு வலயத்தில் 3002 மாணவர்கள் தோற்றியதுடன் அவர்களிற்காக 34 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு வலயத்தில் 576மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களிற்காக14 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரீட்சை மண்டபங்கள் தொற்று நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் கைச்சுத்தம் , உடல் வெப்பநிலை என்பன பார்வையிடப்படுகின்றன.

இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பரீட்சாத்திகளின் நன்மை கருதி பரீட்சை எழுதுவதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் படங்கள் - தீசன் , திலீபன்

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இன்றைய தினம் மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர்.

குறிப்பாக மாணவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக முகக்கவசம் அணிந்து பாடசாலைக்குச் சென்றுள்ளனர். மாணவர்களுடன் பெற்றோரும் பாடசாலையின் நுழைவாயில் வரை சென்றுள்ளனர்.

மேலும் மாணவர்களின் உடல் வெப்ப நிலை அளவீடு செய்யப்பட்டு கைகள் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு சில பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர் கூட்டாமாக பாடசாலைக்கு முன் சமூக இடைவெளியை பின் பற்றாமல் நின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

செய்தி மற்றும் படங்கள் - ஆஷிக்

மலையகம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், கொட்டும் மழையினூடான கடும் காற்று, குளிர் ஆகியன பொருட்ப்படுத்தாது மலையக மாணவர்கள் பலர் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

மலையகத்தில் தரம் ஐந்து புலமை பரிசில் நடைபெறும் சகல பாடசாலைகளும் ம் சுகாதார அறிவுரைகளுக்கமைவாக நேற்றைய தினம்தொற்று நீக்கம் செய்யப்பட்டடுள்ளன.

எனினும் நோர்வூட் பகுதியில் சில பாடசாலைகள் தொற்று நீக்கம் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் தோற்றுவதற்கான சுகாதார ஏற்பாடுகளை சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், ஹட்டன் கல்வி வலயத்தில் 43 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3788 மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளனர். தமிழ் மொழி மூலம் 2181 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 1607 மாணவர்களும் பரீட்சை எழுத அனுமதியை பெற்றுள்ளனர்.

அத்தோடு, நுவரெலியா கல்வி வலயத்தில் 36 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4150 மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளனர். தமிழ் மொழி மூலம் 3300 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 850 மாணவர்களும் பரீட்சை எழுத அனுமதியை பெற்றுள்ளனர்.

செய்தி மற்றும் படங்கள் - திருமால்