இலஞ்சம் வாங்கிய காத்தான்குடி முன்னாள் நகர சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது

Report Print Mubarak in சமூகம்

உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்குவதற்கெனக்கூறி நகைக்கடை வர்த்தகர் ஒருவரிடம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக வாங்கிய காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.சியாட் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்துள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபருக்கு 5 இலட்சமும், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 3 இலட்சமும் கொடுக்க வேண்டுமென 8 இலட்சம் ரூபாவையும், தனக்கு 25 ஆயிரம் ரூபாயுமென 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை குறித்த நபர் இலஞ்சமாகப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

களவாடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்த நகை வியாபாரியொருவரை காப்பாற்றுவதாகச் சொல்லியே இத்தொகை அவரிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காத்தான்குடி நகர சபை உறுப்பினராக கடமையாற்றிய இவர் 'ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச அமைப்பாளர் எனவும் பொய் கூறி மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பணத்துடன் குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.