24 மணிநேரம் முடக்கப்பட்டுள்ள இரு கிராமங்கள்! மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ள விடயம்

Report Print Ashik in சமூகம்
513Shares

மன்னாரில் பட்டித்தோட்டம் மற்றும் பெரிய கடை போன்ற கிராமங்கள் 24 மணிநேரம் முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று மாலை அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகளுக்கு அமைவாக மன்னார் பட்டித்தோட்டம் கிராமத்தில் 5 பேருக்கும், மன்னார் பெரிய கடை பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 90 பேர் வரையானோருக்கு பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக சுகாதார சேவைகள் அமைச்சின் பணிப்பாளரால் மேலும் 24 மணிநேரம் மன்னார் பட்டித்தோட்டம் மற்றும் மன்னார் பெரிய கடை ஆகிய இரண்டு கிராமங்களும் முடக்க நிலைக்கு கொண்டு வருவதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் குறித்த இரு கிராமங்களும், இன்று முதல் நாளை மாலை 6 மணி வரை முடக்க நிலையில் இருக்கும். உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இலங்கை அரச போக்குவரத்து சேவை பேருந்துகள் போக்கு வரத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முதலாவது போக்குவரத்து சேவையானது மன்னார் ஆயர் இல்ல வீதியில் இருந்தும், இரண்டாவது போக்குவரத்து சேவையானது மன்னார் டெலிக்கொம் சந்தியில் இருந்தும் காலை 8 மணிக்கு இடம்பெறும்.

எனவே உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமது போக்குவரத்து சேவைகளை குறித்த போக்குவரத்து சேவைகள் ஊடாக மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.