சமூக சீர்கேடுகள் மையமாக மாறி வரும் ஓட்டமாவடி மேம்பாலம்: பொது மக்கள் விசனம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - ஓட்டமாவடி மேம்பாலம் சமூகச் சீர்கேடு மையமாக மாறி வருவதாக குறித்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு - மட்டக்களப்பு வீதியும் வாழைச்சேனை, மீராவோடை வீதியும் சங்கமிக்கும் மக்கள் நடமாட்டமும், வாகன நெரிசலும் நிறைந்ததாக ஓட்டமாவடி சாவன்னா ஹாஜியார் சந்தி காணப்படுகிறது.

இதனைக்கருத்திற் கொண்டு ஓட்டமாவடி மத்திய கல்லூரி, ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம், ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயம் ஆகியவற்றுக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக் கருதியும், விபத்துக்களை குறைக்கும் நோக்கிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஓட்டமாவடி மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் உபயோகமுள்ளதாகவும், தொடர்ச்சியான பயன் பாட்டுடனும் காணப்பட்ட குறித்த மேம்பாலம், தற்போது கவனிப்பாரற்று எவராலும் பயன்படுத்தப்படாமல் காணப்படுவதுடன், சமூகச் சீர்கேடுகளின் மையமாக மாறி வருவது தொடர்பில் இப்பிரதேச வர்த்தகர்களும், நலன் விரும்பிகளும் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த மேம்பாலம் இரவு வேளைகளில் சிறுவர் துஷ்பிரயோகம் இடமாகவும், போதை பாவிக்கும் இளைஞர்களின் தளமாகவும், சிறுநீர் கழிக்கும் மலசல கூடமாகவும், சமூகச் சீர்கேடுகள் நடைபெறும் மையமாக மாறியுள்ளமை கவலையளிக்கின்றது.

ஆகவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது என்று இப்பிரதேச வர்த்தகர்களும், நலன் விரும்பிகளும் கூறியுள்ளனர்.