முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

Report Print Ajith Ajith in சமூகம்
53Shares

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது சமூக விரோத செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பாக வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் அந்த சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவில் இடம்பெறும் சட்டத்துக்கு புறம்பான மரங்களைத் தறித்து ஏற்றிச் செல்லும் நடவடிக்கை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்களும் மரக்கடத்தல் குழுவினால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவம், இலங்கையில் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியதாகியுள்ளது என்பதை காட்டுகிறது.

வடபகுதியில் தொடர்ந்தும் அதிகார வர்க்கத்தினரால் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் இன மத பேதமின்றி ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டது மாத்திரமின்றி, கொலை செய்யப்பட்ட வரலாறுகள் இலங்கையில் இடம்பெற்றநிலையில் அவற்றுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.

இதன் தொடர்ச்சியாகவே முல்லைத்தீவில் மரக்கடத்தல் குழுக்கள் தொடர்பில் செய்திசேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சில அதிகாரிகளின் துணையுடன் மரக்கடத்தலில் ஈடுபட்டு வரும் குழுவொன்று தொடர்பில் எவரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இதன் உண்மைத்தன்மையை வெளியுலகிற்கு கொண்டு வரும் நோக்குடன் இவர்கள் இருவரும் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். இதன்போதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறை பாரபட்சமின்றி செயற்பட வேண்டும் என்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.