எனக்கு நீதியைப் பெற்றுத் தாருங்கள்! ஜனாதிபதிக்கு ரியாஜ் பதியுதீன் கடிதம்

Report Print Ajith Ajith in சமூகம்

குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் விடுவிக்கப்பட்ட ரியாஜ் பதியுதீன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி தடுத்து வைக்கப்பட்டிருந்த ரியாஜ் பதியுதீன் செப்டம்பர் 29ம் திகதி விடுவிக்கப்பட்டார்.

எனினும், பல கட்சிகள் இந்த விடுதலைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. மேலும் ரியாஜ் பதியுதீனை மீண்டும் தடுத்து வைக்க வேண்டும் என்று கோரி வருகின்றன.

இந்த நிலையிலேயே ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை ரியாஜ் பதியுதீன் அனுப்பியுள்ளார்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குற்றப்புலனாய்வுத் துறையினரால் முழுமையாக விசாரிக்கப்பட்டு, எந்த அடிப்படையும் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது என்று கூறியுள்ளார்.

தெளிவான சான்றுகள் இல்லாததால் தன்னை விடுவிப்பதற்கான முடிவை குற்றப்புலனாய்வுத் துறையினர் எடுத்ததாக ரியாஜ் பதியுடீன் கூறியுள்ளார்.

முந்தைய சந்தர்ப்பத்தில் நீதிவான் ஒருவர் வழங்கிய இதேபோன்ற தீர்ப்பையும் ரியாஜ் தமது கடிதத்தில் மேற்கோள்காட்டியுள்ளார்.

குறித்த தீர்ப்பின் படி, தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று திருப்தி அடைந்தால் சந்தேகநபர்கள் விடுவிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தாம் விடுவிக்கப்பட்டமையை அரசியல் மற்றும் வகுப்புவாத தரப்புகள் எதிர்க்கின்றன. அத்துடன் தம்மை மீண்டும் கைது செய்வதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே அத்தகைய புறம்பான கருத்துக்கள் ஜனாதிபதியிடம் செலவாக்கை செலுத்தாது என்று ரியாஜ் பதியுதீன் ஜனாதிபதிக்கான தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.