ஹட்டனில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் சேதம்! ஒருவர் வைத்தியசாலையில்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா, பட்டல்கெலே தொழிற்சாலைப் பிரிவில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், கல்வியியல் கல்லூரி மாணவியொருவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடும் காற்று காரணமாக வீடுகளுக்கு கீழ் பகுதியில் இருந்த மிகவும் பழமை வாய்ந்த பாரிய மரம் முறிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டின் சுவர் இடிந்து கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த கல்வியியல் கல்லூரி மாணவி மீது விழுந்ததில் அவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குறித்த வீட்டின் உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இன்னும் சில வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மலையக பகுதிகளில் இரவு வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அடிக்கடி பலத்த மழையும் பெய்து வருகிறது.

இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழும் நிலையில் இதனால் மின் தடை மற்றும் போக்குவரத்து பாதிப்பும் நேர்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - டயகம, பொகவந்தலாவ, உள்ளிட்ட பல வீதிகளில் மண்மேடுகள் சரிந்து விழுவதால் இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.