வீட்டில் தனிமையிலிருந்த இளம் குடும்பப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

வீட்டிலிருந்து காலை 6.30 மணியளவில் 3 வயது மற்றும் 7 வயது பிள்ளைகளுடன் குறித்த பெண்ணின் கணவர் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த பெண் வீட்டில் தனிமையிலேயே இருந்துள்ள நிலையில் அவரின் கணவர் மீண்டும் வீட்டிற்கு வந்த சந்தர்ப்பத்தில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் அயவர்களின் உதவியுடன் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கற்பகபுரம் கிராம சேவையாளர் சாந்தரூபன் சடலத்தினை அவதானித்ததுடன், வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கினார்.

வவுனியா பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடவியல் பொலிஸாரின் விசாரணைக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பவத்தில் 27 வயதுடைய முத்துக்குமார் கஜனி என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடன் தொல்லையினால் தான் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பெண் அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததாக மரணித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.