ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து யாழ். ஊடக மன்றத்தினரால் மகஜர் கையளிப்பு

Report Print Sumi in சமூகம்

சட்டவிரோத மரக் கடத்தல்காரர்கள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமைக்கு பக்கச்சார்பற்ற நீதி வழங்கப்பட வேண்டுமென யாழ். ஊடக மன்றம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

முல்லைத்தீவில் கடந்த திங்கட்கிழமை சட்ட விரோதமான மரக் கடத்தல் இடம்பெறுவதை செய்தி மூலம் வெளிக்கொணர்வதற்கு குறித்த இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற கணபதிப்பிள்ளை குமணன் மற்றும் சண்முகம் தவசீலன் ஆகிய இரு ஊடகவியலாளர்களும் கடத்தல்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

குறித்த விடயம் தொடர்பில் நீதித்துறையும், ஊடக அமைச்சு மற்றும் ஊடகத்துறையினைப் பாதுகாக்கின்ற அமைப்புகளும் பக்கச்சார்பற்ற நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் யாழ். ஊடக மன்றம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஊடாக இன்று காலை அனுப்பி வைத்தது.

குறித்த கண்டன மகஜரில், ஊடகத் துறை சார்ந்து செயற்படுகின்ற ஊடகவியலாளர்கள் இவ்வாறான தாக்குதல் சம்பவத்திற்கு உட்படுகின்றபோது அவர்களுக்கு சரியான முறையில் நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து ஊடாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தி குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் ஊடக அமைச்சருக்கும் மகஜரை அனுப்பி இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுப்பதற்கு தான் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.