ரியாஜ் பதியுதீன் மீது ஏழு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணை: அஜித் ரோஹன

Report Print Ajith Ajith in சமூகம்
216Shares

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் மீது 07 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் டப்புலாடி லிவேரா பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரியாஜ் பதியுடீன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றவியல் புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும், ஆதாரங்கள் இல்லாததைக் காரணம் காட்டி குற்றப்புலனாய்வுத்துறை அவரை செப்டம்பர் மாதத்தில் விடுவித்தது.

இந்நிலையில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு விசாரணை திறன்கொண்ட 60 பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

இரண்டு தனித்தனி பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடரும். ஒரு குழு சட்டமா அதிபர் சுட்டிக்காட்டிய 4 குற்றங்கள் தொடர்பிலும், அடுத்த குழு மீதமுள்ள 03 குற்றங்கள் தொடர்பிலும் விசாரணையை நடத்தும் என்று அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் துறையின் உதவி காவல்துறை அதிபர், இரண்டு மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிடுவார்கள்.

இந்த விசாரணைகள் பணச்சலவை மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் ஆகியாவற்றின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.