முல்லைத்தீவு மற்றும் கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன், மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.

தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும் பறிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில் தராதரம் பாராது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பில் கேட்டுக் கொள்வதுடன். மேற்படி இரு சம்பவங்களையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.