வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டு 141 சிறிய குளங்களின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள குளத்திருத்த வேலைகள் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைளை மேலும் விருத்தி செய்து விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அமைவாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்து அதனை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டு 29.4 மில்லியன் ரூபாய் செலவில் 141 சிறிய குளங்களின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 105 சிறிய குளங்களில் திருத்த வேலைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு 34 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது.
அந்நிதியை அரசாங்கத்திடம் இருந்து பெற்று குறித்த குளங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயிகளும் குளங்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.