வாடகை கார் சேவைக்கு வவுனியாவில் மட்டும் தடை விதிக்க முயல்வது ஏன்? வாடகைக்கார் உரிமையாளர் சங்கம் கவலை

Report Print Thileepan Thileepan in சமூகம்

இலங்கையின் பல பாகங்களிலும் நடைமுறையில் உள்ள வாடகைக்கார் சேவைக்கு வவுனியாவில் மட்டும் தடை விதிக்க முயல்வது ஏன் என வவுனியா மாவட்ட வாடகைக் கார் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட வாடகைக்கார் உரிமையாளர் சங்க தலைவர் ச.சாந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் வாடகைக்கார் சேவையில் ஈடுபடுவதற்கு 18 பேர் சங்கமாக ஒன்றிணைந்து இயங்கி வருகின்ற போதும், 5 பேருக்கான அனுமதியை வவுனியா நகரசபை ஊடாக பெற்றிருந்தோம்.

அத்துடன் வாடகைக் கார் போக்குவரத்துக்கான அனுமதியை வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் வழங்கியிருந்தார். இதற்கமைவாக வவுனியா நகரசபையால் வவுனியா வைத்தியசாலை முன்பாக எமக்கு ஒரு நேரத்தில் ஒரு வாடகைக் காரினை நிறுத்துவதற்கான இடமும் ஒதுக்கித் தரப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது முச்சக்கர வண்டிகள் சங்கம் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி எமக்கான அனுமதியை வழங்க கூடாது எனத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் வடக்கின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மாங்குளம் ஆகிய பகுதிகளில் வாடகைக் கார் சேவை நடைமுறையில் உள்ளது. அவ்வாறு இருக்கும் நிலையில் வவுனியாவில் மட்டும் எம்மை சேவையில் ஈடுபட முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் மறுப்பு தெரிவித்து வருகின்றது.

அத்துடன், வாடகைக்கார் சங்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிர் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளோம்.

எமது வாடகைக்கார் சேவையின் ஊடாக முச்சக்கர வண்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நாமும் வாழ்வாதாரத்திற்காக போராடுகின்றோம். எமது தொழிலை செய்வதற்கு அனுமதி வேண்டும்.

இலங்கையின் பல பகுதிகளிலும் நடைமுறையில் உள்ள போதும் வவுனியாவில் மட்டும் அதனை தடுக்க முயல்வது ஏன்..?. எமக்கு வவுனியா நகரசபை அமர்வில் குறித்த விடயம் விவாதிக்கப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில் எமக்கான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றது. எனவே எமக்கு நீதி வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.