வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறும் தமிழக மீனவர்கள்! டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in சமூகம்

தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கைது செய்யப்படாமை காரணமாக தென்னிந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்ட அமைச்சர் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் தமது கடல் எல்லையைத் தாண்டி, நாட்டின் வடக்கு மாகாண கடலில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாகியுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக தமிழக மீனவர்களுடன் ந்தவொரு தொடர்பும் தவிர்க்கப்படுவதால் இலங்கை கடற்படையினர் அத்துமீறும் தமிழக மீனவர்களை கைதுசெய்வதில்லை.

இதனையடுத்தே இழுவைப்படகுகளை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் ஒரு கிலோ மீனைப்பிடிக்க 17 கிலோ கடல்வாழ் உயிரினங்களை அழிக்கின்றனர் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இழுவைப் படகுகளை பயன்படுத்துவதால் சிறிய மீன்கள் அழிக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் கூட்டத்தில் மீன்வள பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவும், இரு நாடுகளும் இணைந்து கடல் வளங்களை நிர்வகிக்கவும் ஒரு கூட்டு பொறிமுறையை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு இந்திய பிரதமர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.