கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது சவாலான விடயம்

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது பெரும் சவாலான விடயம் என்று ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தொற்றுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலக நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

எனினும் இந்த தடுப்பூசிகளை விநியோகிக்கும் வகையில் தற்போது உள்ள நிறுவனங்களில் வெறும் 28 சதவிகிமான நிறுவனங்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசிகளைக் கையாளத்தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

சர்வதேச சரக்கு வானூர்தி சங்கத்தினால் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் 181 நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, தடுப்பூசியை நீண்ட தொலைவுக்கு கொண்டு செல்ல ஏற்றவாறு குளிர்சாதன வசதி கொண்ட போக்குவரத்து வாகனங்களை தயார்நிலையில் வைத்துள்ளன.

ஆனால், ஏறக்குறைய கால் பகுதியினர் தாங்கள் இன்னும் இதுபோன்ற உபகரணங்களை கொண்டிருக்கவில்லை.

எனவே கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் பரவலாக கொண்டு சேர்ப்பது பெரும்சவாலான விஷயமாக இருக்கும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இதேவேளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய கொரோனா தடுப்பூசியின் அளவானது ஒட்டு மொத்தமாக 65,000 தொன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது 2019ம் ஆண்டு உலகெங்கிலும் வானூர்திகள் வழியாக கொண்டு செல்லப்பட்ட பொருட்களை காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.