பல கொலைகளுடன் தொடர்புடையவர் என நம்பப்படும் இலங்கையர் ஒருவர் பெங்களூரில் கைது!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் அரசியல்வாதிகள் உட்பட பல கொலைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் இலங்கையை சேர்ந்த ஒருவர் போலி இந்திய அடையாளத்துடன் கண்டறியப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் வைத்து அவர் தமிழக கியூ கிளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 52 வயதுடைய அழகப்பெரும சுனில் காமினி அல்லது பொன்சேகா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையில் இயங்கும் கிம்புலா-எலா குணாவின் பாதாள உலக குழுவின் முன்னணி உறுப்பினரான இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்ததாகவும் நம்பப்படுகிறது.

2013இல் தமிழ்நாட்டிற்கு வந்த பின்னர் மோசடியாக இந்திய கடவுச்சீட்டை இவர் பெற்றுள்ளார்.

ஆரம்ப நாட்களில், அவர் புதுப்பாக்கத்தில் வசித்து வந்தார். பின்னர் செங்கல்பட்டு மற்றும் பெங்களூருவில் வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ஆதார் அட்டையைப் பெற்றுள்ளார்.

காவல்துறையினரை ஏமாற்றுவதற்காக அவர் தங்கியிருந்த இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டு வந்துள்ளார். இருப்பினும், உளவுத்துறையின் கியூ கிளைக் குழு அவரை கைது செய்தது.

இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இவர், தமிழகத்தில் எந்தவிதமான வன்முறைக் குற்றங்களிலும் ஈடுபடவில்லை. எனினும் கிம்புலா-எலா குணா தலைமையிலான அவரது குழு தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் 1999இல் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீதான தாக்குதலில் தற்போது கைது செய்யப்பட்டவருக்கு தொடர்பிருப்பதாக தமிழக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.