மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி இன்றைக்குச் சொல்வதைப் போலவே அவருடைய அடிவருடிகளும் இன்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஜனாதிபதி சொல்கிறார் நான் ஏதாவது வாயால் சொன்னால் அது தான் சுற்றுநிரூபம் என்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று. இந்நிலையில் தான் ஒருவர் கேட்டிருக்கிறார்.நான் சொல்வது தான் சுற்றுநிரூபம் என்று சொல்லியாவது ஒரு சுற்று நிரூபத்தை கொடுத்தால் என்ன என்று.

எனவே, சட்டத்தால் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. ஆனால், தங்களிடம் தான் அதிகாரம் இருக்கிறது என்ற தோரணையில் இயங்குகிறார்கள். அவர்கள் சொல்வது தான் சட்டமென்று நடைபெறுகிறது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்தது எப்படி? அவர் தன்னுடைய கடமையை சரியாகச் செய்ததன் காரணமாக அவர் பழிவாங்கப்பட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கலுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் எல்லாம் வைத்து ஏதேதோ பேசப்படுகின்றன.

இப்போது இந்த அரசாங்கத்தினால் நேரடியாக மட்டக்களப்பில் அரசியல் பழிவாங்கல் நடந்திருக்கிறது. ஒரு அரச அதிகாரி அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

எனவே, இதற்கான கண்டனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலே தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.