பெருந்தோட்ட தொழிலாளர்களின் உயிரிழப்புக்கள் தொழில் அமைச்சுக்கு வெறும் செய்தியே

Report Print Ajith Ajith in சமூகம்

தொழிலில் ஈடுபடுகின்ற வேளையில் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உயிரிழப்புக்கள் பெருந்தோட்ட அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றிற்கு வெறும் செய்திகளாகவே அமைகின்றன என புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ .மகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

பலாங்கொடை பிரதேசத்தில் பெண் தொழிலாளர்கள் இருவர் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலே குறித்த இரு தொழிலாளர்களும் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மலையக மக்களின் வாக்குகளிலும் தொழிலாளர்களின் சந்தா பணத்திலும் அரசியல் நடத்தும் தொழிற்சங்கங்களுக்கு அவர்களின் உயிர் மீது அக்கறையோ கரிசனையோ இல்லை என்று தெரிகிறது.

இந்த சம்பவம் இயற்கை அனர்த்தமாக கருதப்பட்டாலும் இன்றைய மலையக பிரதேசங்களின் அவலநிலையாகவே நோக்கப்பட வேண்டும்.

மலையக பிரதேசங்களில் தொடரும் இயற்கை அனர்த்த சம்பவங்களினால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன.

மலையக பெருந்தோட்ட பகுதிகள் முறையாக பராமரிக்கப்படாமலும் அடிப்படை வசதிகள் இன்றியும் இயங்கிவருகின்றன.

அத்துடன் இடம்பெறும் உயிரிழப்புக்களின் போது தொழிற்சங்கங்கள் அனுதாப செய்திகளுடன் தமது கடமையை முடித்து கொள்கின்றன.

இந்தநிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கக்கு பாகுபாடின்றி அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட வேண்டும்.

முக்கியமாக தொழிலாளர்களின் வேலைத்தள பாதுகாப்பு உறுதி, அனர்த்தங்களின் போது உரிய இழப்பீடு,தொழிலாளர்களுக்கான முறையான காப்புறுதித் திட்டம் ஆகியன நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கோரிக்கை விடுத்துள்ளார்.