தடுப்புக்காவலில் உள்ள நபர் பயன்படுத்தியதாக கூறப்படும் கார் மீட்பு

Report Print Mubarak in சமூகம்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ள முகமது கனிபா முகமது அஹ்ரம் பயன்படுத்தி வந்த எவரி ரக கார் ஒன்றை காத்தான்குடி றிஸ்வி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் மீட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 25ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டு மொனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முகமது ஹனிபா முகமது அஹ்ரம் பெயரில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த காரே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி.பண்டார தலைமையில் என்.அன்பரசன் அருள்குமார், பந்துல, சரோன் ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போது கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கார் மீட்கப்பட்டுள்ளது.

இந்தக் கார் காத்தான்குடியிலிருந்து நுவரெலியா பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக பயிற்சியாளர்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதா என்ற நோக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மீட்கப்பட்ட கார் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.