முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

Report Print Varunan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த சண்முகம் தவசீலன், கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் செய்தி சேகரிப்பிற்கு சென்றிருந்த வேளை மரக்கடத்தலில் ஈடுபட்டுவரும் கும்பல் ஒன்றினால் கடந்த 12 ஆம் திகதி தாக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணிகள், இது இரண்டு நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவம் எனவும், குறித்த ஊடகவியலாளர்களில் ஒருவரின் சகோதரன் மீதான வழக்கு தொடர்பில் பழிவாங்கும் நோக்குடன் செய்தி சேகரிப்பதற்காக இரண்டு ஊடகர்களும் சந்தேகநபர்களின் இடத்துக்கு சென்றநேரம் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அத்துமீறி சந்தேகநபர்களின் வளவுக்குள் நுழைந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் எனவும் செய்தியாளர்கள் என அறிந்திருக்காத நிலையில் தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் வாதிட்டிருந்தனர்.

எனவே கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் பிணை வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டதரணிகளால் வாதங்கள் முன்வைக்கபட்டது.

இந்த நிலையில் மனுதாரர்களான பாதிக்கபட்டுள்ள ஊடகவியலாளர்கள் சார்பில் ஆஜரான சட்டதரணிகள் குழாம் தமது தரப்பு வாதங்களை மன்றுக்கு எடுத்துரைத்தது.

குறிப்பாக இந்த இரண்டு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் சமூகத்தில் ஒருகொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த வழக்கு விவகாரம் பொது நலவிவகாரம். எனவே தனிப்பட்ட விவகாரங்களோடு இதை இணைத்து பார்க்க முடியாது. அதற்கு எமது எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம்.

குறிப்பாக பொதுமக்களால் இந்த வழக்கு விசாரணைகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றது. இரண்டு ஊடகவியலாளர்களும் புலனாய்வு அறிக்கையிடலுக்காக பல நாட்களாக இந்த விவகாரம் தொடர்பில் செய்திகளை சேகரித்து வந்தவர்கள்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் இந்த செய்தியில் கவனமெடுத்து முல்லைத்தீவில் கேள்விக்குளாக்கப்பட்டுவரும் வனவளம் தொடர்பில் செய்தியை அறிக்கையிட சென்ற சமயமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கையில் பல ஊடக அமைப்புகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் சட்டவாக்க துறையின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும் மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த விவகாரம் ஊடக சுதந்திரத்துக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள பாரிய சவால். இந்த இளம் ஊடகவியலாளர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக இந்த மாவட்டத்தில் பல்வேறுபட்ட மனித உரிமை சார் பிரச்சினைகளை செய்திகளாக வெளியிட்டு வருபவர்கள்.

இந்த மாவட்டத்தின் பல்வேறு சுற்றுசூழல் சார்ந்த செய்திகளை தேசிய அளவிலும் சர்வதேச வெளியிலும் கொண்டுவந்தவர்கள்.

எனவே இந்த வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சந்தேகநபர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இன்னும் இரண்டு பேர் கைது செய்யப்படவில்லை. எனவே பிணை வழங்க ஆட்சேபனை தெரிவிக்கின்றோம்.

பிணை கிடைத்தால் சந்தேகநபர்களால் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் மற்றும் சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து தப்பி செல்ல நேரிடும் என தமது வாதங்களை முன்வைத்துள்ளனர்.

பொலிஸ் தரப்பிலும் பிணை வழங்கும் விண்ணப்பத்துக்கான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பிணை வழங்கினால் சந்தேகநபர்களால் கைது செய்யப்படவேண்டிய ஏனைய இரண்டு பேரையும் கைது செய்ய தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவும் சந்தேகநபர்கள் தமது காணிக்குள் ஊடகவியலாளர்கள் இருவரும் அத்துமீறி நுழைந்தார்கள் என சொன்னால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கமான 119 இற்கு அழைப்பெடுத்து கூறியிருக்க வேண்டும்.

ஆனால் மாறாக தாக்குதல் மேற்கொண்டிருக்கின்றார்கள். எனவே பிணை வழங்க பொலிஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கின்றோம் என பொலிஸ் தரப்பு தெரிவித்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் செவிமடுத்த கௌரவ நீதிபதி இரண்டு ஊடகவியலாளர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரபலமான ஊடகவியலாளர்கள் என்ற அடிப்படையிலும் சந்தேகநபர்கள் பிணையில் வந்தால் சாட்சிகள் அச்சுறுத்தபடுவார்கள் என்றும், கைது செய்யப்பட வேண்டிய ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் தப்புவதற்காக வாய்ப்புகள் உண்டென கருதுவதாலும் பிணை விண்ணப்பத்தை மன்று நிராகரிக்கின்றது.

அத்தோடு விளக்கமறியலில் இருக்கும் இரண்டு சந்தேகநபர்களினதும் விளக்கமறியலை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடித்து அன்றைய நாளுக்கு வழக்கை ஒத்திவைத்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது.