புத்தளம் – சிலாபம் வீதியில் வாகனத்தை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றார் ரிஷாத் - சி.ஐ.டி. விசாரணையில் அம்பலம்

Report Print Rakesh in சமூகம்
1829Shares

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தான் விரைவில் கைதுசெய்யப்படுவேன் என தனது வாகனத்திலுள்ள வானொலிச் செய்தி மூலம் அறிந்து புத்தளம் – சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் எனக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ரிஷாத் கடந்த 13ஆம் திகதி புத்தளத்திலிருந்து கொழும்புக்கு வந்திருந்தார்.

பயணத்தின்போது தனது வாகனத்திலுள்ள வானொலியில் ஒலிபரப்பான தனியார் வானொலி அலைவரிசை ஒன்றின் செய்தியை செவிமடுத்துக் கொண்டிருந்தார் எனக் குற்றப்புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உடனடியாக பதியுதீனை கைதுசெய்து காவலில் வைக்குமாறு அறிவித்ததாக அந்தச் செய்தி அமைந்திருந்தது. உடனே சாரதியிடம் புத்தளம் – சிலாபம் வீதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துமாறு கூறியதுடன் உடன் அதிலிருந்து வெளியேறி பிறிதொரு வாகனத்தில் புத்தளத்துக்குத் தப்பினார்.

இது குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தநேரத்தில் ரிஷாத்தின் பாதுகாப்புக்கு வாகனத்தில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேகநபரான ரிஷாத் பதியுதீன் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பின்பு, முன்னாள் அமைச்சரின் அதிசொகுசு ஜீப்பைக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் பறிமுதல் செய்ததுடன் அதிலிருந்த இரு சாரதிகளையும் கைதுசெய்துள்ளனர். வாகனத்தில் உள்ளே கண்டெடுக்கப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

தற்போது ரிஷாத் பதியுதீனைத் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பில் நேற்றுமுன்தினம் ரிஷாத் பதியுதீனின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீண்ட வாக்குமூலத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may like this video