காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வெளிநாட்டில் உள்ளனர் என்றால் தொடர்புகளை ஏற்படுத்தி தாருங்கள்! அரசிடம் கோரிக்கை

Report Print Kumar in சமூகம்

எமது உறவுகள் வெளிநாட்டில் உள்ளனர் என்றால் தொடர்புகளை ஏற்படுத்தி தாருங்கள் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

இன்று கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்தை முன்வைத்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஹெகலிய ரம்புக்வெல அண்மையில் ஒரு கருத்தினை முன்வைத்திருந்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் என்று கூறியிருந்தார்.

அவ்வாறு அவர்கள் வெளிநாடு சென்றிருந்தால் இலங்கை விமான நிலையத்தினூடாக சென்றிருக்க வேண்டும். அவ்வாறு சென்றால் இலங்கை அரசுக்கு தெரியாமல் எதுவும் நடைபெற்றிருக்காது.

அப்படியானால் அரசு சொல்லட்டும் யார் யாருக்கு கடவுச்சீட்டு கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் எங்கு இருக்கின்றார்கள், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி தந்தால் நாங்கள் தேட வேண்டிய அவசியம் இல்லை.

இப்படியான அப்பட்டமான பொய்களை சொல்லி எமது போராட்டத்தை இலங்கை அரசு கொச்சைபடுத்த முனைகிறது. எமது தேடல் தொடங்கி 11 வருடம் ஆகின்றது.

எமது உறவுகளை தேடும் நேரத்தில் புலனாய்வு பிரிவினர், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் தொடரும் போராட்டம் எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடரும். இலங்கை அரசு உண்மையை கூறியே ஆக வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய போராட்டத்தில் 78 உறவுகளை இழந்தும் எமது போராட்டம் தொடர்கின்றது . எமது போராட்டத்தில் பக்க பலமாய் இருந்த ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இவர்கள் தாக்கப்பட்டதை அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாகவும், எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாகவும் வன்மையாக கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.