வவுனியா பேருந்து நிலையத்தில் மீண்டும் குழப்பம்!

Report Print Theesan in சமூகம்
419Shares

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குழப்பமான சூழல் ஒன்று இன்று ஏற்பட்டிருந்தது.

வவுனியா புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதல் தனியார் பேருந்து மற்றும் அரச பேருந்து தரப்பினர்களுக்கு இடையில் முரண்பாடான நிலமை ஏற்பட்டு வருகின்றது.

குறிப்பாக இணைந்த நேர அட்டவணையை நடைமுறைப்படுத்தி ஒரே நிரலில் நின்று இரு பேருந்துகளும் சேவையில் ஈடுபடும் விடயத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நீண்டகாலமாக குழப்பமான நிலை ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் பேருந்து நிலையத்திற்கு சென்ற மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன, பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால்சில்வா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இணைந்த சேவை அட்டவணைப்படி, ஒரே நிரலில் நின்று இரண்டு பேருந்து தரப்புகளும் சேவையில் ஈடுபடுமாறு தெரிவித்திருந்தனர்.

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன் அரச பேருந்து தரப்பினரால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இணைந்த நேர அட்டவணையில் சேவையில் ஈடுபடுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம், எனினும் ஒரே நிரலில் இருந்து இரண்டு தரப்புகளும் சேவையில் ஈடுபடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்ப்படும் என்றும் அதற்கு நாம் இணங்க மாட்டோம் எனவும் அரச பேருந்து தரப்பினர் தெரிவித்தனர்.

இணைந்த சேவை அட்டவணைப்படி தனித்தனி பகுதிகளில் தரித்து நின்றே சேவையில் ஈடுபடுமாறு நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. எனினும் இலங்கை போக்குவரத்து சேவையை முடக்கும் எண்ணத்துடன் இவ்வாறான சதிச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு சில அரச உயர் அதிகாரிகளும் துணைபோவதாக அவர்கள் குற்றம் சுமத்தியதுடன், அரச அதிகாரிகளுடனும் முரண்பட்டிருந்தனர்.

நாட்டில் பல இடங்களில் நடைமுறையில் உள்ள இணைந்த நேர அட்டவணையை வவுனியாவில் மாத்திரம் நடைமுறைப்படுத்துவதற்கு அரச பேருந்து தரப்பினர் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர்.

அத்துடன் வெளி மாகாணங்களில் இருந்து வருகைத் தரும் பேருந்துகளை பேருந்து நிலையத்தினுள் அனுமதிக்குமாறும் அவர்கள் கோருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் பரவலிற்கு மத்தியில் இவ்வாறு செய்வதனால் வைரஸ் பரவல் அதிகம் ஏற்படும் நிலையே உருவாகும்.

அத்துடன் வெளிமாகாண பேருந்துகள், பேருந்து நிலையத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்ற முடியும்.

நாமும் மக்களிற்கான சேவையையே முன்னெடுக்கிறோம். ஒரே நிரலில் நின்று சேவையில் ஈடுபடுவதற்கு நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தனியார் பேருந்து தரப்பினர் தெரிவித்தனர்.

இதனால் குறித்த பகுதியில் சற்று நேரம் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்ததுடன், பேருந்து நிலையப்பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.