வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டம்

Report Print Rakesh in சமூகம்
190Shares

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை வட மாகாணம் தழுவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றது.

இது தொடர்பில் அந்தச் சங்கம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமாகிய நாம் வட மாகாணத்தில் உள்ள மத்திய மற்றும் மாகாண சேவைகளில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களைக் கொண்ட தொழிற்சங்கமாகும்.

அந்தவகையில் நாம் எதிர்வரும் 19ஆம் திகதி (திங்கட்கிழமை) வட மாகாணம் தழுவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளோம்.

தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக தினமும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து கடமைக்காகச் சென்று வந்த நிறைமாத கர்ப்பிணியாகக் காணப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தனக்கான தற்காலிக இடமாற்றத்தை இரண்டு தடவைகள் கோரியிருந்தும் அது குறித்த திணைக்களத் தலைவரால் மறுக்கப்பட்டதன் காரணமாக தொடந்தும் தனது பிரயாணத்தை மேற்கொண்ட நிலையில் அவர் தனது குழந்தையைப் பிரசவிப்பதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இறந்துள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் பல அவ்வபோது வட மாகாணத்தில் இடம்பெற்ற வண்ணமே உள்ளது. இந்தத் துன்பியல் நிகழ்வு அரச உத்தியோகத்தர்களாகிய அனைவரையும் மிகுந்த மன உளைசலுக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.

குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் இடமாற்றம் கோரிய சந்தர்ப்பத்தில் அது மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட்டிருப்பின் குறித்த இழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று நாம் கருதுகின்றோம்.

இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்தும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உரிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்தச் சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தனியொரு அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு மாத்திரம் நடந்தஸ விடயமாகக் கருதாமல் எந்தவொரு அரச உத்தியோகத்தருக்கு நடந்திருந்தாலும் அதனை நாம் மனிதாபிமான முறையில் அவசியமாக அணுக வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் போராட்டத்துக்கு வட மாகாணத்தில் காணப்படும் அனைத்து அரச சேவையாளர்களது தொழிற்சங்கங்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து வலுச்சேர்க்கக் கூடிய வகையில் சுகயீன விடுமுறையை அறிவித்து ஆதரவு தருமாறு வேண்டுகின்றோம்" - என்றுள்ளது.