ஊடகவியலாளர்களுக்கு நடந்த அச்சுறுத்தல்கள் எனக்கு தெரியும்: மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

Report Print Kumar in சமூகம்

ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு மக்களுக்காக குரல் கொடுத்தீர்கள்,எவ்வாறு தவறுகளை சுட்டிக் காட்டினீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஊடகவியலாளர்களுக்கு நடந்த அச்சுறுத்தல்கள் எனக்கு தெரியும் என மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக கடமையேற்ற மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று மாவட்ட அரசாங்க அதிபராக பொறுப்பேற்ற அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன்.முன்னைய அரசாங்க அதிபர்களுக்கு எவ்வாறான ஒத்துழைப்புகளை வழங்கினீர்களோ அவ்வாறான ஒத்துழைப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.

இது நான் விரும்பி அழுத்தங்களைப் பிரயோகித்து எனக்கு வழங்கப்பட்ட பதவியல்ல. காலத்தின் நிமித்தம் எனக்கு வழங்கப்பட்டது. இந்த பதவியை வெற்றிகரமாக செய்வதற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதில் எந்த சிந்தனையும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு மக்களுக்காக குரல் கொடுத்தீர்களோ, தவறுகளை சுட்டிக்காட்டினீர்கள் என எனக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு நடந்த அச்சுறுத்தல்கள் எனக்கு தெரியும்.

உயர் பதவியில் இருந்த நான் உங்களது அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தேன்.

உங்களுடைய ஒத்துழைப்பும் எனக்கு அவசியமாக தேவை.தேவையானவற்றை சுட்டிக்காட்டுவதை நான் அன்பாக வரவேற்கின்றேன்.

புதிய அரசாங்கம், புதிய போக்கு, புதிய பார்வை, புதிய சிந்தனை என உங்கள் அனைவருக்கும் தெரியும். அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.