திருகோணமலையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவான் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களையும் இன்று மூதூர் பதில் நீதவான் எம்.ஏ.சீ.மஹ்ரூப் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகனம் சுற்றுவதாக விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் கார் ஒன்றையும், கெப் ரக வாகனங்கள் இரண்டை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர்கள் 9 பேரையும் கைது செய்துள்ளதாகவும் அதில் வைத்தியர் ஒருவர் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தோப்பூர், காலி, அத்துறுகிரிய மற்றும் நிலாவெளி போன்ற பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.