ஞாயிறு குண்டுத்தாக்குதல் சந்தேகநபர்கள் 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

Report Print Kumar in சமூகம்

ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 08 பேர் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல பாகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றுக்கு அழைத்துவரப்படாத நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தவர்கள் மட்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மட்டக்களப்பு நீதிமன்றின் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இவர்கள் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது பொலிஸார் சார்பில் சட்டத்தரணியும், சிரேஸ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரூவான் குணசேகர ஆஜராகியிருந்தார்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கினை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளார்.