தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

Report Print Vanniyan in சமூகம்

கடந்த வாரம் முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் வைத்து மரக்கடத்தலுடன் தொடர்புடைய கும்பல் நடாத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரியும் அழிக்கப்பட்டுவரும் காடுகளை பாதுகாக்க கோரியும் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முல்லைத்தீவு நகரில் மேற்கொள்ளப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிலமராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினமான நேற்று அவரது திருவுருவ படத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும் , அழிக்காதே அழிக்காதே காடுகளை அழிக்காதே , ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் , வன வளத்தை அழிப்பவர்களுக்கு உடந்தையாக இருக்காதே , எங்களின் குரலான ஊடகர்களை தாக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி ,

இரண்டாயிரமாம் ஆண்டு மயில்வாகனம் நிமலராஜன் என்ற ஊடகவியலாளர் படுகொலை செய்ய பட்டு 20 வருடங்கள் கிடக்கின்ற நிலையில் இன்னும் அவரின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை மாறாக தற்போதும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தற்போதும் இடம்பெற்று வருகின்றது .

கடந்த வாரம் இதே போலத்தான் எமக்கான குரலாக ஒலிக்கின்ற குமணன் , தவசீலன் ஆகியோர்மீது தாக்குதல் நடாத்தபட்டுள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் . இதற்கான நீதியை கேட்டு நாங்கள் நிற்கின்றோம் . எமக்கு இவர்கள்மீது அக்கறை உண்டு அதற்காக தான் நாங்கள் இன்று அவர்களுக்காக போராட்டம் செய்கின்றோம் .

இவர்கள் எமது பிரச்சினைக்கு அப்பால் ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரச்சனைகளை தமது எழுத்துகள்மூலம் வெளிக்கொண்டு வருபவர்கள். வன வளம் பாதுகாக்க படவேண்டும் இந்த காடுகளை அழிப்பதற்கு உடந்தையாக இருப்பவர்கள் இதனை நிறுத்தவேண்டும் . இந்த பிரச்சினையை வெளிகொண்டுவந்தவர்களே தாக்கபட்டுள்ளார்கள்.

இண்டைக்கு இவர்கள் மீதான தாக்குதலை நாங்கள் கண்டிக்காது விட்டோம் என்றால் நாளை இன்னொரு ஊடகவியலாளரும் கொல்லப்படலாம் எனவே இவர்கள் தாக்கபட்டத்துக்கான நீதி வலிமையானதாக இருக்க வேண்டும் இவர்களின் விடயத்தில் நீதி சரியானதாக இருந்தால் நாளை இன்னொரு ஊடகவியலாளருக்கு இவ்வாறான சம்பவம் இடம்பெறுவதை தடுப்பதற்கான வழியாக அது இருக்கும் இவ்வாறான தாக்குதல்கள் இனி இடம்பெறாது இருக்கவேண்டும் என்றால் சரியான நீதி கிடைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.