சப்ரகமுவ மாகாணத்தின் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பிலான முழுமையான விபரம்!

Report Print Ajith Ajith in சமூகம்

சப்ரகமுவ மாகாணத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் 21 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் கொரோனா தொற்று ஒழிப்பு குழுவின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் தலைமையில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கேகாலை மாவட்டத்தில் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதை தவிர கேகாலை ,ரம்புக்கன வைத்தியசாலையில் சப்ரகமுவ மாகாணத்தை தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலிருந்து அடையாளம் காணப்பட்ட 80 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு கேகாலை மாவட்டத்தில் 888 பேர் வீடுகளிலும், 242 பேர் பின்னவல பிரென்ட்டெக்ஸ் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவத்தை பிரதேசத்தில் ஒருவரும், கிரியெல்ல பிரதேசத்தில் இருவரும் எலபாத்த பிரதேசத்தில் ஒருவர் உட்பட மொத்தம் 4 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு இரத்தினபுரி மாவட்டத்தில் 1506 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் மற்றும் பிரென்ட்டெக்ஸ் ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர் என கூறப்படும் வேறு பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் எனவும், சப்ரகமுவ மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் மூலம் இரத்தினபுரி புஸ்சல்ல முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் ருவான்புர கல்வியற் கல்லூரி என்பன தனிமைப்படுத்தல் நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி இரத்தினபுரி, புஸ்சல்ல முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் ருவான்புர கல்வியற் கல்லூரி என்பன தயார் நிலையில் உள்ளதாகவும், இதில் 400 பேர் தங்குவதற்கான வசதிகள் உள்ளதாவும், இக்கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கன வைத்தியசாலை மற்றும் உதுகொட, பெலிகல, கிதுல்கல ஆகிய வைத்தியசாலைகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, இறக்குவானை, கிலிமலே ஆகிய வைத்தியசாலைகளும் கொவிட் 19 தொற்றாளர்கள் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கொவிட் 19 தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் மாற்று பாதைகளும் தனியான வார்ட்டுத்தொகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளதோடு, சிறந்த முறையில் சிகிச்சைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முகாமையாளர் தமித் பட்டவெல,

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள பிரதான வீதிகளில் தனியார் பேருந்து வண்டிகளின் எண்ணிக்கை நூற்றுக்கு நாற்பது வீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

அத்தோடு இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் கிராமிய பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுத்துப்பட்டுள்ள தனியார் பேருந்து வண்டிகள் நூற்றுக்கு பத்து வீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி கூட்டத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் ரஞ்ஜனி ஜயகொடி, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலணி லொக்குபோத்தாகம, மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர உட்பட இரத்தினபுரி மாவட்ட பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் சுகாதார அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.