ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முரணான கருத்துக்களை வெளியிட்ட அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர்

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தன, முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி முதல் 2019 மே முதலாம் திகதி வரை தாம் முன்னாள் ஜனாதிபதியை 61 தடவைகள் மாத்திரமே தொடர்பு கொண்டதாக அவர் குறுக்கு விசாரணை ஒன்றின்போது தெரிவித்தார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் சட்டத்தரணி ஷாமில் பெரேரா சாட்சியை குறுக்கு விசாரணை செய்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சாட்சிக்கு புலனாய்வுத்துறையின் தலைவர் என்ற வகையில் நாள்தோறும் முன்னாள் ஜனாதிபதியை தொடர்புக்கொள்ள முடிந்ததா? என்று அவர் கேட்டபோதே நிலந்த ஜெயவர்த்தன தமது பதிலை வழங்கினார்.

எனினும் இதன்போது சட்டத்தரணி ஷாமில் பெரேரா மாறுப்பட்ட அறிக்கை ஒன்றை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தார்.

தொலைபேசி தரவுகளின்படி நிலந்த ஜெயவர்த்தன 2019ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2019 மார்ச் 31 வரை மாத்திரம் நிலந்த ஜெயவர்த்தன 138 தடவைகள் முன்னாள் ஜனாதிபதியை தொடர்பு கொண்டதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு உளவுஅமைப்பு தகவல் தந்ததன் பின்னர் மாத்திரம் 2019 ஏப்ரல்20ஆம் திகதி வரை 14 தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் ஏன் வெளிநாட்டு உளவு அமைப்பின் எச்சரிக்கையை முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவிக்கவில்லை என்று சட்டத்தரணி சாட்சியான அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தனவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சாட்சி தாம் இந்த எச்சரிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கு விசாரணை செய்த காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் சட்டத்தரணி அனுர மெத்தகொட, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற நாளன்று குறித்த வெளிநாட்டு உளவு அமைப்பு தகவல்களை வழங்கியதா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த சாட்சி, முன்னர் தமக்கு தகவல் அளித்த அதே உளவு நிறுவனம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை 8.27அளவில் தகவல்களை தந்ததாக குறிப்பிட்டார். அன்றைய தினத்தில் காலை 6 மணிமுதல் இரவு 10மணிவரை தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அந்த உளவு அமைப்பு தெரிவித்ததாக சாட்சி தெரிவித்தார்.

இதனையடுத்து காலை 8.46அளவில் தாம் அது குறித்து அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை தொடர்புக்கொண்டுகூறியதாக அவர் சாட்சியமளித்தார். இதன்போது ஏற்கனவே இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று விட்டதாக அவர் தெரிவித்தார்.

எனினும் சாட்சியின் இந்த தகவலை மறுத்த சட்டத்தரணி அனுர மெத்தகொட, சாட்சிக்கு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை 6.30அளவில் வெளிநாட்டு உளவுத்துறையின் தகவல் கிடைத்துவிட்டது என்று குறிப்பிட்டார்.

இந்தநிலையில் சட்டத்தரணியின் இந்த தகவலை சாட்சி இதன்போது மறுத்தார். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, மைத்ரி குணரட்ன, சாட்சியை குறுக்கு விசாரணை செய்தார்.

2019 ஏப்ரல் 21 இல் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் ஏப்ரல் 4ம் திகதியன்று தாக்குதல்கள் குறித்து எச்சரித்ததா என்று அவர் வினவினார்.

அது தொடர்பில் பதிலளித்த சாட்சி, ஆபத்து இருந்தது. எனவே தாம் உளவுத்துறையுடன் தொடர்புகொண்டு அதனை உறுதிப்படுத்திக்கொண்டதாக குறிப்பிட்டார்.

தகவல் ஒன்று கிடைத்தும் அதனை ஏனைய பிரிவுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஒருநாட்டில் அரச புலனாய்வு பிரிவு தேவையில்லை என்று சாட்சி குறிப்பிட்டார்.

இதன்போது சாட்சியான அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளரான நிலந்த ஜெயவர்த்தனவை நோக்கி கருத்துரைத்த, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர், தாம் அவர் வழங்கிய பதில்களில் திருப்திக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாகவும் தாம் அறிவுரை கூறியிருப்பதாக தெரிவித்த அவர், ஆணைக்குழுவின் சார்பாக சட்டத்தரணிகள் கேட்கும் கேள்விகளின்போது விவாதிக்கவோ அல்லது கேள்விகளை எழுப்பவோ வேண்டாம் என்று தெரிவித்தார். இது கடைசி முறையாக இருக்கட்டும் என்று குறிப்பிட்ட ஆணைக்குழுவின் தலைவர். இது மீண்டும் தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இதேவேளை பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பொணாண்டோவின் சாட்சியத்துடன் அன்றைய நாள் சாட்சியப்பதிவு நிறைவுப்பெற்றது.

இதன்போது சாட்சியான ஹேமசிறி பெர்ணான்டோவிடம் கேள்வி எழுப்பிய அவரின் சட்டத்தரணி திலான் ஜெயசூரிய, தாக்குதல்களுக்கு முன்னர், மருத்துவ சிகிச்சைக்காக முன்னாள் ஜனாதிபதி நாட்டில் இருந்து புறப்பட்ட வேளையில் குறிப்பாக ஏப்ரல் 16ஆம் திகதியன்று அவரை விமான நிலையத்தில் வைத்து சந்தித்தபோது அவர் சுகவீனமடைந்திருந்தாரா என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் ஜனாதிபதியை அவர் வெளிநாட்டுக்கு புறப்படுவதற்கு முன்னர் விமானநிலையத்தில் வைத்து சந்தித்தபோது அவர் சுகவீனமடைந்திருந்தமைக்கான அறிகுறி எதனையும் காணவில்லை என்று தெரிவித்தார்.