வட்டுவாகல் பாலம் தொடர்பாக நெடுஞ்சாலை அமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ள சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

Report Print Dias Dias in சமூகம்

கிளிநொச்சி - முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலமாகிய 402 மீற்றர் நீளமான வட்டுவாகல் பாலம் இதுவரை எந்தவித புனரமைப்பும் செய்யப்படாமல் இருப்பது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நெடுஞ்சாலை அமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள போதிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான கிளிநொச்சி - முல்லைத்தீவு A 50 பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலமாகிய 402 மீற்றர் நீளமான வட்டுவாகல் பாலம் இதுவரை எந்தவித புனரமைப்பும் செய்யபடாமல் காணப்படுகிறது.

இப்பாதையால் ஒரு வாகனம் மாத்திரம் பயணிக்க முடியும். இப்பாதை சேதமடைந்த சிறிய வீதியாக இருப்பதனால் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பாக கடந்த ஆட்சி காலத்திலும் இந்த சபையில் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடுள்ள போதும் எந்தவிதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த பால வேலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? என நெடுஞ்சாலைகள் அமைச்சரிடம் கேள்விகளை தொடுத்துள்ளார்.

இதற்குரிய நிதி ஒதுக்கபட்டுள்ளதாகவும் வேலைகளை ஆரம்பிப்பதற்குரிய முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வருடத்துக்குள் இப் பால வேலைகள் நிறைவுறும் எனவும் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினருக்கு பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.