விவசாய செய்கை தொடர்பில் அக்கராயன் கிராம மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - அக்கராயன் மக்கள் தாம் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த பகுதிகளில் தொடர்ந்தும் பயிர் செய்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கரைச்சி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

இன்று காலையில் கரைச்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குறித்த மக்களின் பிரதிநிதிகளாக மூவர் கரைச்சி பிரதேச செயலாளரை சந்தித்து தமது பிரச்சினைகளை முன்வைத்ததுடன் அவரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

குறித்த காணியில் 40 ஆண்டுகளிற்கு மேலாக நெற்செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது சிலர் பிரதேச செயலகத்தின் அனுமதி கடிதத்துடன் தாம் காலபோக செய்கை மேற்கொண்டுள்ள பகுதி அடங்கலாக கனரக வாகனங்கள் ஊடாக துப்பரவு செய்து வருவதாகவும், அதனால் செய்கை மேற்கொண்டுள்ள பகுதி பாதிக்கப்படுவதாகவும் இதன்போது அவர்கள் பிரதேச செயலாளரிடம் கூறியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த காணிகள் அரச ஒதுக்கீட்டு காணிகளாகும். அப்பகுதியில் நீண்ட காலமாக மக்கள் நெற்செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை அதே பிரதேசத்தை சேர்ந்த மேலும் பலர் தமக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு காணிகள் வழங்குமாறு கோரியிருந்தனர்.

அதற்கு அமைவாக அரச ஒதுக்கீட்டு காணியை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தற்போது உள்ள கொள்கைக்கு அமைவாக தரிசாக காணப்படும் நிலங்களை பயன்படுத்தும் வகையில் குறித்த நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை துப்பரவு செய்யப்பட்டு விவசாய நடவடிக்கைகளிற்காக வழங்கப்படவுள்ளது.

அவ்வாறு வழங்கப்படும் காணிகளில் வான் மரங்கள், நிரந்தர கட்டடங்கள் அமைக்க கூடாது என்ற நிபந்தனையுடனேயே அவர்களிற்கு வழங்கப்படவுள்ளது. இதன்போது ஏறகனவே பயன்படுத்தி வரும் விவசாயிகளிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலாளரின் சந்திப்பின் பின்னர் போராட்டத்தில ஈடுபட்ட மக்கள் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் நீண்ட காலமாக நாங்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அது அரச ஒதுக்கீட்டு பகுதி என்பது எமக்கு தெரியும்.

இவ்வாறான நிலையில் நாம் செய்கை மேற்கொண்டுவரும் குறிப்பிட்ட அளவு காணிகளிற்காக துப்பரவு பணிகள் இடம்பெறுவதாக தெரிவித்து செய்கை மேற்கொண்டுள்ள பகுதிகளும் அழிக்கப்படுகின்றமை தொடர்பில் இன்று பிரதேச செயலாளரிடம் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

நாளை குறித்த பகுதிக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாதவகையில் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கந்தபுரத்தில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான கரும்பு தோட்ட காணியில் செல்வந்தர்கள் 30 ஏக்கருக்கு அதிகளவில் செய்கை மேற்கொள்கின்றனர்.

அவற்றை பிரித்து மக்களிற்கு வழங்குவதே பொருத்தமானது. அவ்விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.