மினுவாங்கொட கொத்தணியில் இருந்து துணைக்கொத்தணிகள் வெளிவருவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது. அத்துடன் இது கொரோனா தொற்றின் சமூக பரவலுக்கு வழிவகுக்கும் என்று அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையை பொறுத்தவரையில் தினசரி இந்த அச்சம் தீவிரமாகி வருவதாக சம்மேளனத்தின் அதிகாரி வைத்திய கலாநிதி ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ள அவர்,
வைரஸ் ஒரு சமூக பரவலுக்கு வழிவகுக்குமா அல்லது அது ஏற்கனவே சமூக மட்டத்திற்கு பரவியிருக்கிறதா என்பதை அடையாளம் காண நிலைமையை கண்காணிக்குமாறு ஏற்கனவே தொற்றுநோயியல் பிரிவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அலுத்கே தெரிவித்துள்ளார்
இந்த நிலைமை சமூகப்பரவலுக்கு வழிவகுத்தால், அதைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே சமூகத்தில் கொரோனா பரவுவதைத் தடுப்பதன் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை கண்டறியும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் பல்வேறு பகுதிகளிலிருந்து துணைக் கொத்தணிகள் தோன்றினால் தொடர்புத் தடமறிதல் சாத்தியமில்லை. அதைத் தடுக்க முழுமையான முடக்கத்துக்கே செல்ல வேண்டியேற்படும் என்றும் அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.