கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்கள்! லதாகரன்

Report Print Gokulan Gokulan in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளாக கரடியனாறு, காத்தான்குடி போன்ற வைத்தியசாலைகள் மாற்றப்பட்டுள்ளன.

இதற்கமைய காத்தான்குடி வைத்தியசாலையில் 170 பேரும் கரடியனாறு வைத்தியசாலையில் 42 பேரும் என மொத்தம் 212 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார நிலைமை தொடர்பில் இன்றையதினம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அதிகரித்துள்ளமை காரணமாக தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்தற்கான வைத்தியசாலை மேலும் தேவைப்படுகின்றது.

இதற்கமைய சுகாதார அமைச்சு மாவட்டம் தோறும் ஒவ்வொரு வைத்தியசாலைகளை பயன்படுத்துவதற்கான திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையையும், மட்டக்களப்பில் கரடியனாறு வைத்தியசாலையையும் அம்பாறையில் பாலமுனை, தமனை உட்பட 4 வைத்தியசாலைகளை கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் புதிய வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

இதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் வேலைபாடுகள் இடம்பெற்று வருவதுடன் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்ட காத்தான்குடி வைத்தியசாலையிழல் இதுவரை 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரடியனாறு வைத்தியசாலையில் பேலியகொடை மீன்சந்தையில் அடையாளம் காணப்பட்ட 42 பேர் உட்பட 212 பேர் நேற்று இரவுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.