மீன் விற்பனையாளர்கள் மூலம் நாடு முழுவதும் வைரஸ் பரவும் ஆபத்து! பொது மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்
885Shares

ஏற்கனவே 13 மாவட்டங்களில் பரவியிருக்கும் மினுவாங்கொட பிராண்டிக்ஸ் கொரோனா தொற்று மீதமுள்ள மாவட்டங்களிலும் பரவுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

குருநாகல், புத்தளம், கேகாலை, கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, அநுராதபுரம், பொலன்னறுவ, பதுளை, மொனராகலை, கம்பஹா ஆகிய இடங்களில் இருந்து கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன் விற்பனையாளர்கள் உட்பட 49 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீன் விற்பனையாளர்கள் மூலம் நாடு முழுவதும் வைரஸ் பரவ மற்றொரு வாய்ப்பு உள்ளது.

"பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது. மீன் விற்பனையாளர்களிடம் இருந்து நாடு முழுவதும் மீன்களை கொண்டு செல்வோர் இருக்கலாம்" என்று சமரவீர குறிப்பிட்டார்.

எனவே, பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன்களை கொண்டு வந்த விற்பனையாளர்களிடம் அறிகுறிகள் குறித்து பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வைத்திய கலாநிதி சமரவீர கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை நோயாளிகளின் தொடர்புகளைக் கண்டறிய அனைத்து மாவட்டங்களிலும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள தொற்றுநோயியல் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் இதுவரை 425,000இற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டன.

மேலும் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.