சுங்க அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று

Report Print Steephen Steephen in சமூகம்
112Shares

இலங்கை சுங்க திணைக்களத்தின் இரண்டு பரிசோதகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதியாகியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின், கொழும்பு - இஞ்சிக்கடை சந்தியில் உள்ள பொருட்களை கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் பிரதான வாயில் கதவுக்கு அருகில் கடமையாற்றும் இரண்டு பரிசோதகர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.

இவர்கள் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் பரவிய போல், அத்தியவசிய பொருட்கள், மருந்து போன்றவை முதலீட்டு வலயங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

மூலப்பொருட்கள் போன்ற ஏனைய இறக்குமதி செய்யும் அத்தியவசிய பொருட்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொற்றுக்காரணமாக சுங்கத் திணைக்களம் மூடப்படவில்லை என்ற போதிலும், மிகவும் அத்தியாவசியமான சேவைகள் மட்டுமே நாளை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு, மருந்துப் பொருட்கள், கைத்தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் உள்ளிட்டவை மட்டுமே நாளைய தினம் முதல் சுங்கத் திணைக்களத்தினால் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆடை உற்பத்தி, மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை விடுவித்துக்கொள்வதற்காக பொதுமக்கள் சுங்கத் திணைக்களத்திற்கு வருகை தருவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.